உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாக ஆங்கில புத்தாண்டு விளங்கி வருகிறது. பரந்து, விரிந்த இந்த பூமிப்பந்தில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலிசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.
இந்நிலையில், (இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
சரியாக 12 மணி அடித்ததும் நாட்டின் பல முக்கிய பெருநகரங்களில் புத்தாண்டு விழா களைகட்டியது. கடற்கரைகள், பூங்காக்கள், முக்கிய சாலைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மகிழ்ச்சி கேளிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
குறிப்பாக, சென்னையில் அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எட்வர்ட் எலியட்ஸ் பீச் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
அதைதொடர்ந்து, இன்று அதிகாலையில் இருந்தே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை, பூஜைகளை செய்து இந்த புத்தாண்டு இனிதாக, வளமாக அமைய தெய்வங்களை வேண்டிக்கொண்டனர்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்து மக்கள் கங்கை நதியில் புனித நீராடி, பூஜை புனஸ்காரங்கள் செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் தடாகத்தில் சீக்கிய மக்களும் புனித நீராடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதேபோல், ஜைன மதத்தை சேர்ந்தவர்களும் இனிப்புகளை பரிமாறி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு இனிதாகவும், சிறப்பாகவும் அமைய ‘மாலைமலர் டாட்காம்’ வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!