சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஆக்ஷன்’ எப்படி என்று பார்ப்போம்.
ராணுவத்தில் விஷால் கர்னலாக இருக்கிறார். அவருடன் தமன்னாவும் ராணுவ அதிகாரியாக பணியாற்றுகிறார். விஷாலின் அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர், அவரது அண்ணன் ராம்கி, முதலமைச்சராக தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே தேசிய கட்சியுடன் விஷால் அப்பாவின் கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயாராகிறது. இதற்காக தமிழகத்தில் நடக்கும் கட்சி கூட்டத்தில், தேசிய கட்சியின் தலைவர் கலந்துக் கொள்ளும்போது, ராம்கியின் நண்பர் மூலம், சதிதிட்டம் தீட்டி அவர் கொள்ளப்பட, அந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழுகிறது. குடும்பத்தின் மீது விழுந்த பழியை போக்கி, உண்மை குற்றவாளியை பிடிக்க களத்தில் இறங்கும் விஷால், பல்வேறு நாடுகளுக்கு சுற்றி குற்றவாளியை எப்படி பிடிக்கிறார், என்பது தான் ‘ஆக்ஷன்’ படத்தின் கதை.
ஒன் மேன் ஆர்மி போல படம் முழுவதுமே விஷால் மட்டுமே ஓடுகிறார், பறக்கிறார், தாவுகிறார். படம் முழுவதும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருப்பது போல, லாஜிக் மீறல்களும் நிறைந்திருக்கிறது.
விஷாலின் கம்பீரமான தோற்றத்தினால் அவர் ஈடுபடும் ஆக்ஷன் காட்சிகள் நம்பும்படியாக இருந்தாலும், சில இடங்களில் படம் எப்போது முடியும், என்ற எண்ணத்தையும் நம் மனதில் ஏற்படுத்திவிடுகிறது.
படத்தின் நாயகியான ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஒரே ஒரு பாடலுடன் தனது பணியை முடித்துக் கொள்ள, வில்லியாக நடித்திருக்கும் அகன்ஷா புரி, விஷாலுடன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபட்டு நம்மை ஈர்க்கிறார். அதிலும், விஷால் அவரை துரத்தும் போது, அவர் பிடிபடுவாரா, இல்லையா என்பதில் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
விஷாலுடன் ராணுவத்தில் பணியாற்றும் தமன்னா அவரை ஒருதலையாக காதலிப்பதோடு, இரண்டாம் பாதி முழுவதும் விஷாலுடன் பயணிப்பதோடு, சில இடங்களில் விஷாலைப் போல் குதிப்பது, ஓடுவது என்று அதிரடி காட்டியிருந்தாலும், சொல்லும்படியாக எதையும் செய்துவிடவில்லை.
டட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தில் வரும் பல லொக்கேஷன்கள் பிரம்மாண்டமாகவும், புதியதாகவும் இருக்கிறது. ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் எடுபடவில்லை.
துருக்கி, லண்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் கதை பயணித்தாலும், சரியான பாதையில் பயணிக்காமல் திக்குமுக்காடியிருக்கிறது. அதிலும் இரண்டாம் பாதி கதை, எங்கு செல்கிறது என்று இயக்குநர் சுந்தர்.சி-க்கே தெரியவில்லை போலிருக்கு.
படத்தின் தலைப்புக்கு ஏற்ப சில ஆக்ஷன் காட்சிகள் நம்மை சீட் நுணியில் உட்காரை வைத்தாலும், பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து விஷால் தப்பித்து வருவது போன்ற காட்சிகளில், நம் காதில் பூக்குடையையே இயக்குநர் சுந்தர்.சி வைத்துவிடுகிறார்.
விஷாலின் ஆக்ஷன் காட்சிகளும், ஒளிப்பதிவும் நம்மை வெகுவாக கவர்ந்தாலும், இரண்டாம் பாதி படமும், ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும் சற்று தலைவலியை ஏற்படுத்திவிடுகிறது.
-ரேட்டிங் 2.5/5