ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் சோதனை திடீர் நிறுத்தம்

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்றது.

இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும். ஆனால் அவை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆனால், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவர் எங்கு இருக்கிறார், அவரது நோயின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

கொரோனா தடுப்பூசிக்கான 3-வது கட்ட சோதனைகள் மேற்கொண்டிருக்கும் 9 நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools