சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
4 கோடியே 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 11 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.
பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல மற்றும் ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இங்கிலாந்தில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள தவலின் படி, லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் தொகுப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் (நவம்பர் 2) வழங்கப்படும் எனவும் இதற்காக தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.