ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பிடித்த ‘ஆதார்’
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதியை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொகுத்து வழங்குகிறது. இந்த அகராதியின் 10-வது பதிப்பு நேற்று வெளியாகி உள்ளது. இந்த பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில வார்த்தைகள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக இந்திய மக்களின் தனித்துவ அடையாளமான ‘ஆதார்’ இடம் பிடித்துள்ளது.
மேலும் சால், டப்பா, ஹர்தால், ஷாதி உள்ளிட்ட வார்த்தைகளும் ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பில் இடம் பெற்றுள்ளன.
26 புதிய வார்த்தைகளில் 22 வார்த்தைகள் அச்சு பதிப்பில் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய 4 வார்த்தைகள் டிஜிட்டல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய வார்த்தைகளில் பஸ் ஸ்டேண்ட், டீம்டு யுனிவர்சிட்டி, எப்.ஐ.ஆர்., நான்-வெஜ், வீடியோ கிராப் உள்ளிட்ட வார்த்தைகளும் அடங்கும்.
இந்த அகராதியில் மொத்தம் 384 இந்திய ஆங்கில வார்த்தைகள் உள்ளன. இந்த பதிப்பில் சாத்பாட், பேக் நியூஸ், மைக்ரோ பிளாஸ்டிக் போன்று மொத்தம் 1,000 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.