ஆகஸ்ட் மாதம் இறுதியில் கொரோனா 3வது அலை தாக்கும் – இந்திய மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு பிறகு கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவியது. மே மாதம் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்டது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிந்தது. ஆக்சிஜன் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழே வந்தது. தமிழகத்தில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 2,312 ஆக குறைந்தது.
ஆனாலும் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டுள்ளதால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாடு முழுவதும் இதுவரை 36 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை தொடங்கும் என்றும் கொரோனா வைரஸ் முன்பைவிட இனி கூடுதல் வீரியத்துடன் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் இருப்பதால் அடுத்த 100 நாட்களும் நமக்கு மிகவும் முக்கியமானவை. இந்த 100 நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால்தான் 3-வது அலை வருவது குறித்த கேள்வி எழுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உலகம் 3-வது அலையை நோக்கி நடைபோட்டு வருகிறது.
3-வது அலை வந்தால் அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டு மக்கள் வைரசால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.
ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு திறனை நாம் இன்னும் பெறவில்லை. தடுப்பூசி திட்டத்தால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
மேலும் நாம் இன்னும் முழுமையாக தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. எனவே தீவிர தடுப்பூசி திட்டத்தை தொடங்கி உள்ளோம். அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடிய 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும். ஆனால் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3-வது அலை தாக்கும் அபாயம் இருப்பதால் அடுத்து வரும் 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்த நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. ஏற்கனவே கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் மெதுவாக குறைய தொடங்கி உள்ளது. இது நமக்கான எச்சரிக்கையாகும்.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் முழுமையாக பின்பற்றினால் 3-வது அலை தாக்குவதை தடுக்க முடியும். அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு தடுப்பூசி திட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள போதிலும் சில பகுதிகளில் பாதிப்பு தொடர்ந்து கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
73 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றாததே இதற்கு காரணம். முகக்கவசம் அணிவது வெகுவாக குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
முகக்கவசம் அணிவதை நமது வாழ்வின் புதிய வழக்கமாக கடைபிடிக்க வேண்டும். மேலும் 2 அடி சமூக இடைவெளி மேற்கொள்வதையும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.