Tamilவிளையாட்டு

அஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது – கங்குலி கருத்து

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

2-வது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றதால் அஸ்வின், ஜடேஜா களம் இறங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அஸ்வின் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது. அவரது காயம் இன்னும் குணமடையாததால் இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டிலும் இடம் பெறவில்லை.

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடியவர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் அஸ்வின் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ச்சியாக காயம் அடைந்திருப்பது கங்குலிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் மொயீன் அலி 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற நிலையில், காயத்துடன் களம் இறங்கிய அஸ்வின், 37.1 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். காயத்தால் விளையாடியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ச்சியாக அஸ்வின் காயம் அடைவது குறித்து கங்குலி கூறுகையில் “தற்போது எனக்கு அஸ்வின் காயம் குறித்து பெரும் கவலையாக உள்ளது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, தற்போது ஆஸ்திரேலியா போன்ற முக்கிய தொடரின்போது தொடர்ச்சியாக காயம் அடைந்துள்ளதால், அஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது.

எதிரணியில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணிக்கு அஸ்வின் தேவைப்படுகிறார். ஆனால் காயத்தால் அவருடைய தனிச்சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அஸ்வினால் செயல்பட முடியவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *