Tamilவிளையாட்டு

அஸ்வின் போல் பந்து வீச முயற்சிக்க வேண்டாம் – நாதன் லயனுக்கு இயான் சேப்பல் அறிவுரை

பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். இருவரும் இதுவரையில் 31 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளனர்.

ஜடேஜா 17 விக்கெட்டுகளும், அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர். அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ‘நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாடும் போது எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது நன்கு தெரியும். அஸ்வின் ஒரு ஸ்மார்ட்டான பவுலர். அவர் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஜடேஜா தனது பவுலிங் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஆனாலும், ஜடேஜா அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சில நேரங்களில் அப்படி நடக்கும். களத்தில் அவர்கள் செய்வதை உங்களால் (ஆஸி. வீரர்கள்) செய்ய முடியாது. அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும், என சேப்பல் தெரிவித்துள்ளார்.