அஸ்வினிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன்
இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்-விகாரி ஜோடியை வீழ்த்த முடியாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் விரக்தி அடைந்தனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன், லபுசேன், மேத்யூ வாடே ஆகியோர் “சிலெட்ஜிங்”கில் ஈடுபட்டனர். அஸ்வின் களத்தில் இருந்த போது டிம்பெய்ன் வார்த்தைகளால் உசுப்பேற்றி சீண்டினார். மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.
4-வது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பன் மைதானத்துக்கு வா, பார்ப்போம் என்று சீண்டினார். இதற்கு அஸ்வின், “நீ இந்தியா வா பார்ப்போம். அதுதான் உனக்கு கடைசி தொடராக இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பெய்ன் சீண்டியதால், அஸ்வின் நடுவரிடம் புகார் அளித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விகாரி அடித்த கேட்சை பெய்ன் கோட்டை விட்டார்.
இந்தநிலையில் ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் செயல்பட்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நன்றாக வழிநடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
நெருக்கடி காரணமாகவே நான் தவறாக செயல்பட்டு விட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட நான் குறைவாக நடந்து கொண்டேன். நேற்றைய ஆட்டம் எங்களது மதிப்பில் சரிவை ஏற்படுத்தி விட்டது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன்.
நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன். அடிக்கடி பேசினேன். ஆனால் கேட்சை விட்டு விட்டேன் என்று கூறி எனது தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
பின்னர் நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன்பின் எல்லாம் சரியாகி விட்டது. அடுத்த டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.