Tamilசெய்திகள்

அவினாசி துணை மின்நிலையத்தில் தீ விபத்து!

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள கந்தம்பாளையம் பிரிவு பகுதியில் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 6.30 மணியளவில் துணை மின்நிலையத்தில் ஒரு டிரான்ஸ்பார்மில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் வேகம் அதிகரித்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் 2 மின்மாற்றிகள் நாசமானது. மேலும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு வேனும் தீப்பிடித்து எரிந்தது. சுமார் 45 நிமிடம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

அசம்பாவிதத்தை தடுக்க மின்வாரியம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் சேதமடைந்த 2 மின்மாற்றிகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தின் காரணமாக சுற்றுப்புறம் உள்ள 13 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. விரைவில் மின்மாற்றிகள் சரி செய்து மின் விநியோகம் செய்யப்படும் என்று மின்சார துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *