மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மீடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 7 சுற்றுகளாக வீரர்கள் களமிறக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதில் மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் களத்தில் நீண்டநேரம் களத்தில் நின்று காளைகளை அடக்கி முதலிடத்தல் இருந்தார். அவரைத் தொடர்ந்து அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார்.
பிற்பகலுக்குப் பிறகு முதலிடத்தை பிடிப்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 6 சுற்றுகள் முடிந்து இறுதிச்சுற்று தொடங்கியபோது, கார்த்திக் 20 காளைகளை அடக்கி முதலிடத்திலும், முருகன் 19 காளைகளை அடக்கி 2வது இடத்திலும் இருந்தனர்.
இறுதிச்சுற்றின் முடிவில் அவனியாபுரம் கார்த்திக் 24 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றார். அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 மாடுகளை பிடித்த முருகனுக்கு 2ம் பரிசாக, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 12 காளைகளை பிடித்த பரத் குமாருக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக மணப்பாறை தேவசகாயம் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அவனியாபுரம் ராமுவின் காளை இரண்டாவது பரிசை பெற்றது.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு அவனியாபுரத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.