அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் தொடங்கியது.

காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அனைவரும் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்பட்டன.

வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. பார்வையாளர்கள் சுற்றி நின்று, வீரர்களை உற்சாகப்படுத்திவருகின்றனர்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 788 காளைகள் களமிறக்கப்படுகின்றன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை போட்டி நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools