X

அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர் – விசாரணை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆதாரங்களும் இல்லாமல் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். மன்னிப்பு கேட்காததால் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முதல் விசாரணை என்பதால் எடப்பாடி பழனிசாமி இன்று கோர்ட்டில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் ஐ.எஸ். இன்பதுரை ஆஜரானார்.

எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், காஞ்சிபுரம் தொகுதி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடி இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வக்கீல் இன்பதுரை அளித்த பேட்டி வருமாறு:-

மத்திய சென்னை தொகுதியின் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.