X

‘அவதார் 2’ படம் வெளியாவதில் சிக்கல்!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் 3 வார வாசூலில் இருந்து ஒவ்வொரு வாரமும் 60 சதவீதத்தை வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கேரளாவில் வேற்று மொழி படங்களின் வசூலில் 50 முதல் 55 சதவீதம் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மேல் வழங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறியுள்ளது. இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இப்படம் கேரளாவில் வெளியாகுவதில் சிக்கல் நீடிக்கிறது.