Tamilசெய்திகள்

அவகோட பழத்தை சாகுபடி செய்து ரூ.1 கோடி சம்பாதிக்கும் மத்திய பிரதேச இளைஞர்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்து வளர்ந்தவர் ஹர்ஷித் கோதா. அவர் 2013-20-ல் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் வணிகப் படிப்பை படித்தார்.

வணிக மாணவராக இருந்து விவசாயியாக மாறியது தொடர்பாக அவர் கூறுகையில், நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றபோது, அவகேடோ பழங்கள் எளிதாகக் கிடைத்தன. ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றில் நான் நாட்டம் கொண்டதால், சத்துக்கள் நிறைந்த பழத்தை விரும்ப ஆரம்பித்தேன்.

விரைவில், அவகேடோ பழத்தை தினமும் சாப்பிட ஆரம்பித்தேன். இருப்பினும், கோடை காலத்தில் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம், அவகேடோ பழங்களை என்னால் வாங்க முடியவில்லை. மேலும் இங்கு கிடைக்கும் அவகேடோ பழங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதனால் அவகேடோ விவசாயத்தை இங்கு தொடங்க எண்ணினேன்.

பழங்களின் இருப்பு மற்றும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை பற்றி ஆர்வமாக இருந்த ஹர்ஷித், சில ஆராய்ச்சிகளின் மூலமாக இங்கிலாந்தில் கிடைக்கும் அவகேடோ பழங்கள் இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.

வறண்ட மற்றும் வெப்பமான நாடான இஸ்ரேல் அவகேடோ பழங்களை பயிரிட்டு ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வது அவரை சிந்திக்க செய்தது. இந்த உண்மையைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போபாலில் அவகேடோ பழத்தை பயிரிடுவதில் உறுதியாக இருந்தார்.

அவகேடோ சாகுபடியை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், ஹர்ஷித் இஸ்ரேலில் உள்ள அவகேடோ விவசாயிகளை தொடர்பு கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர் பலரிடம் பேசினார். சிலர் அவருக்கு கற்பிக்க மறுப்பு தெரிவித்தனர். மற்றவர்கள் நிறைய பணம் கேட்டார்கள். இருப்பினும், ஒரு நபர் அவரை வழிநடத்த ஒப்புக்கொண்டார்

மேலும் ஒரு இஸ்ரேலிய கிராமத்தில் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்தார். ஹர்ஷித் அங்கு சென்று ஒன்றரை மாதங்கள் இருந்தார். மதியம் வேலை செய்வது கூலித்தொழிலாளிகளால் வெயில் தாங்க முடியாது என்பதால் காலை 5 மணி முதல் 10 மணி வரை வயலில் வேலை செய்தோம் என்று அவர் கூறுகிறார். பின்னர் அவர் உழைத்து, அவகேடோ சாகுபடிக்கு இஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள் பற்றி தெரிந்துகொண்டார்.

பயிற்சியை முடித்த ஹர்ஷித் இந்தியா திரும்பினார். இருப்பினும், மண்ணின் நிலை, நீர் இருப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றை ஆய்வு செய்வதே மிகப்பெரிய தடையாக இருந்தது. இதற்காக இஸ்ரேலில் இருந்து தனது வழிகாட்டியை தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு வரவழைத்தார். அவர் போபாலில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளை மதிப்பீடு செய்து, அங்கு சில அவகேடோ வகைகளை வெற்றிகரமாக வளர்க்கலாம் என்று கூறினார்.

இந்தியாவில் உயர்தர அவகேடோ செடிகளை கண்டுபிடிப்பதும் சவாலாக இருந்தது. இதை எதிர்த்து, 2019-ம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற அவகேடோ வகைகளை இறக்குமதி செய்ய ஹர்ஷித் முடிவு செய்தார். இறக்குமதி செயல்பாடு தாமதம், கொரோனா வைரஸ் போன்ற பல தடைகளுக்குப் பிறகு, இறுதியாக இஸ்ரேலில் இருந்து 2021-ல் அவகேடோ செடிகள் முதன்முதலில் அனுப்பப்பட்டது. அதை நான் 2023-ல் எனது தோட்டங்களில் நட்டேன். அதற்கு முன், இந்த செடிகள் நர்சரியில் வைக்கப்பட்டன. நடவு செய்த 14 மாதங்களில் செடிகள் காய்க்க ஆரம்பித்தன.

யுனிரேம் (UniRam) என்பது ஒரு நுட்பமாகும், இது ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நாளும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உரத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்தியாவில் தினசரி உரமிட வேண்டிய ஒரே பயிர் அவகேடோ மட்டுமே என்றார்.

தற்போது 10 ஏக்கர் நிலத்தில் அவகேடோ சாகுபடி செய்து ஹர்ஷித் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். ஹர்ஷித் கூறும்போது, அந்தச் செடியின் விலை அதன் வயதைப் பொறுத்து, ஒன்றரை வருட செடிகள் ரூ.2 ஆயிரத்து 500-க்கும், இரண்டு வருட செடிகள் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.

அவகேடோ பழங்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.250-300 ஆகவும், சில்லறை விற்பனையில் ஒரு அவகேடோ பழம் ரூ.200-250 ஆகவும் உள்ளது. ஒரு அவகேடோ பழம் 250-300 கிராம் எடை கொண்டது. ஒவ்வொரு செடியும் 40-50 ஆண்டுகள் பழம் தரும். வருமானம் பல்வேறு வகையைச் சார்ந்தது, ஆனால் சராசரியாக ஒரு நபர் ஒரு ஏக்கருக்கு 6-12 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் அவகேடோ இறக்குமதி சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, சந்தையில் அவகேடோ பழங்களை விற்பனை செய்வது ஒரு பிரச்சனை அல்ல. எனவே, விவசாயிகள் தங்கள் விவசாயத்தை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். அதிக லாபம் தரக்கூடிய பயிர்களை பயிரிடுங்கள். புளூபெர்ரி (அவுரிநெல்லிகள்) மற்றும் அவகேடோ பழங்கள் வேகமாக வளர்ந்து வரும் சந்தையை கொண்ட பழங்கள், என்று கூறுகிறார்.