Tamilசெய்திகள்

அல்வா கொடுத்து ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது நாங்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்க்க முயன்றோம். ஆனால் அமைச்சர்களாகிய எங்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. 71 நாட்கள் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

ஜெயலலிதா சாதாரணமாக இறக்கவில்லை. கிராமத்தில் படிக்காதவனை கேட்டால்கூட இதை சொல்வான். ஒருவரை சாகடிக்க வி‌ஷம் கொடுக்க வேண்டியது இல்லை. வெல்லம் கொடுத்தே சாகடிக்கலாம். இது கிராமத்துக்குகாரனுக்கும் தெரியும். அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரைநோய் இருப்பது தெரிந்தும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு அல்வா கொடுத்துள்ளனர். நோய் முற்றி அவரை இயற்கையாக இறக்க வைக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கமாக இருந்துள்ளது. இப்படி சதித் திட்டம் போட்டு ஜெயலலிதாவை நம்மிடம் இருந்து பிரித்து விட்டார்கள்.

நன்றாக குணமாகி உடல்நிலை தேறி வரும் போது, ஒருவருக்கு எப்படி மாரடைப்பு வரும்? மாரடைப்பு வந்தால் மருத்துவமனை வராண்டா முழுவதும் ரத்தம் சிந்தியது எப்படி? எங்கிருந்து ரத்தம் வந்தது? இதனை நாங்கள் கேட்கமாட்டோமா? இவர்களை எல்லாம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளியேவரும் என்று அப்போதே சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன். விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும்.

ஜெயலலிதாவுக்கு வாழ்க்கை, அதிகாரம், வசதி வாய்ப்பு இத்தனை இருந்தும் இந்த சாவு வந்திருக்க வேண்டியது இல்லை. இந்த அளவுக்கு கொடுமையான சாவை கொடுத்து விட்டார்கள். ஜெயலலிதா சாவுக்கு காரணமானவர்கள் விரைவில் சிறை செல்வார்கள். ஜெயலலிதா ஆன்மா அவர்களை சும்மா விடாது.

தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து தகுதி இல்லாதவர்களையும் எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருக்கு துரோகம் நினைக்கிறார்கள். எந்த சின்னத்தில் வெற்றி பெற்றார்களே அந்த இரட்டைஇலையை அழிப்பேன் என்று சொல்கிறார்கள். இரட்டைஇலை சின்னத்தை அழிப்பேன் என்று கூறியவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.

ஜெயலலிதா ஆசி இருக்கும்வரை, தொண்டர்கள் ஆதரவு இருக்கும்வரை அ.தி.மு.க.வை யாரும் அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *