Tamilசினிமா

அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விஷால்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் உள்ளார். விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் அவரது எதிர்தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

விஷால் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டை முன்வைத்து ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், டி.சிவா உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ந்தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தியதோடு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

20-ந்தேதி காலையில் விஷால் தனது ஆதரவாளர்களுடன் வந்து பூட்டை உடைத்து அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் விஷாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விஷால், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் சங்க அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசு கட்டுப்பாட்டில் தயாரிப்பாளர் சங்கத்தைக் கொண்டு வந்ததற்கு கண்டனம் தெரிவித்து சீலை அகற்ற உத்தரவிட்டது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு வைத்த சீல் அகற்றப்பட்ட பின்னர் கடந்த 24-ந்தேதி மாலை தயாரிப்பாளர் சங்கத் தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய விஷால் ‘தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.

பூட்டு போடும் வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

விஷால் கூறியதை போலவே பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், டி.சிவா, ஐங்கரன் விஜயகுமார், கே.ராஜன், தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, சவுந்தர பாண்டியன், பழனிவேல், ஜான் மேக்ஸ், வடிவேல், பஞ்சு பரத், திருமலை, பிஜி பாலாஜி, ஜோதி நளினி, சுப்பையா, சாலை சகாதேவன், சக்தி சிதம்பரம், பாபு கணேஷ், அடிதடி முருகன், குண்டு முருகன், ஆர்.எச்.அசோக், கணபதி, விடியல் ராஜு, சீனிவாசன், மீரா கதிரவன், கோயம்பேடு தமிழரசு, அஸ்ஸலாம் உள்ளிட்ட 29 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஷோகாஸ் நோட்டீஸ் என்பது ‘சங்கத்துக்கு விரோதமாக செயல்படுகிறீர்கள். தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?’ என்று எச்சரிக்கை விடுக்கும் நோட்டீஸ் ஆகும்.

இந்த நோட்டீசுக்கு எதிர் தரப்பினர் தரும் பதிலை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *