Tamilசெய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கடடு தொடங்கி நடைபெறுகிறது.

இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 921 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். போட்டி துவங்கும் முன்னர் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் அதனை ஏற்று கொண்டனர்.

அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். கோவில் காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகளான சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் களத்தில் நின்று விளையாடியது. எந்த வீரரையும் நெருங்க விடாமல் களத்தில் கெத்து காட்டியது. அந்த மாடுகளை எந்த வீரரும் பிடிக்க முடியாததால் மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *