X

அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் கரும்பை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி

திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 12 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வந்தார். அதனை அறுவடை செய்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவை எந்திரம் வேலை செய்யாத காரணத்தால் சர்க்கரை ஆலை மூடப்பட்டதாக தெரிகிறது.

இதனால் செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆலைக்கு கரும்பு பயிர் செய்த விவசாயிகள் கரும்பை அறுவடை செய்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சக்கரபாணி கடந்த ஆண்டும் 12 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் அறுவடை செய்தார். அப்போது செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் செஞ்சியில் உள்ள கரும்பு சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று நிர்வாகம் கூறியதால் கூலி ஆட்களை வைத்து கரும்பை வெட்டி அனுப்பினார். அப்போது பயிரிட்ட செலவு கூட தனக்கு கிடைக்கவில்லை என சக்கரபாணி கூறினார்.

பின்னர் அவர் மீண்டும் கரும்பு பயிரிட்டார். அந்த பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்னும் அரவை தொடங்கவில்லை. இதனால் கரும்பை வெட்டி செஞ்சியில் உள்ள ஆலைக்கு அனுப்பினால் நஷ்டம் ஏற்படும். எனவே, கரும்பு பயிரை அழிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி விவசாயம் செய்த கரும்பை டிராக்டர் மூலம் அவர் அழித்து விட்டார். தனக்கு ஆலைக்கு ஆட்களை வைத்து கரும்புவெட்டி அனுப்பினால் நஷ்டம் ஏற்படும் எனவும் இதனால் கரும்பு பயிர்களை வயலிலேயே அழித்து விட்டார்.

Tags: tamil news