டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு பற்றி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியிடம் கேட்டபோது, பல நாட்கள் வந்து போய்விட்டன, ஆனால் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.
‘ஒவ்வொரு விசாரணையின்போதும் நாங்கள் புதிய நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு செல்கிறோம். அவர்களின் (குற்றவாளிகள்) வழக்கறிஞர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்று என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்றார் ஆஷா தேவி.