X

அறிவாலயம் பக்கம் கமல்ஹாசன் வரவில்லை – திமுக மூத்த நிர்வாகிகள் கருத்து

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுடன் தமிழ்நாட்டில் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தி.மு.க.விடம் வழங்கி உள்ளது.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறக் கூடிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை அண்ணா அறிவாலயம் பக்கம் இன்னும் வரவில்லை. அவரது கட்சி நிர்வாகிகள் யாரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தொடர்பு கொள்ளாமல் உள்ளனர்.

கமல்ஹாசன் வெளிநாட்டில் இருப்பதாகவும் இன்னும் 2 நாட்களில் சென்னை திரும்புவார் என்றும் அதன் பிறகு பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கையாக பேசி வருகின்றனர். ஆனால் இதுபற்றி தி.மு.க. மூத்த நிர்வாகிகளிடம் கேட்டதற்கு தி.மு.க.வில் இருந்து கமல்ஹாசனுக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி நாங்கள் அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. ஏனென்றால் அவர் எங்கள் கூட்டணியில் இல்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். அந்த வகையில் இப்போதும் அவர் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்து ஒரு சீட் கேட்டு பெறுவார் என தெரிகிறது. உள் ஒதுக்கீடாக காங்கிரஸ் கொடுக்கும் என தெரிகிறது. அதனால்தான் அறிவாலயம் பக்கம் கமல்ஹாசன் வரவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலின் போது தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரி ஒரு தொகுதியும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த முறை தி.மு.க. அதிக தொகுதியில் நிற்க விரும்புவதால் காங்கிரசின் தொகுதி குறைய வாய்ப்புள்ளது. அதை ஈடுகட்டும் வகையில் காங்கிரசுக்கு ஒதுக்கி கொடுக்கும் தொகுதிகளில் ஒரு தொகுதியை கமல்ஹாசன் கட்சிக்கு கொடுக்கும்படி கூறி வருகிறோம். இது அனேகமாக உடன்பாடுக்கு வந்து விடும். தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கே தொகுதி கொடுக்க முடியாத சூழ்நிலையில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.

Tags: tamil news