Tamilவிளையாட்டு

அறிமுக போட்டியில் சாதனை படைத்த குருணால் பாண்ட்யா

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டியை 3-1 என்ற கணக்கிலும், டி 20 போட்டியை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் 30 வயதான குருணால் பாண்ட்யா சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அறிமுகத்திற்குரிய தொப்பியை அவரது தம்பி ஹர்திக் பாண்ட்யா வழங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார்.

அதன்பிறகு களம் இறங்கி 26 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் இவர் தான்.

இதற்கு முன் 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அறிமுக வீரர் ஜான் மோரிஸ் 35 பந்துகளில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த 31 ஆண்டு கால சாதனையை குருணால் பாண்ட்யா முறியடித்தார்.

இன்னிங்ஸ் முடிந்ததும் ஒளிபரப்பு நிறுவனம் அவரிடம் பேட்டி கண்ட போதும்  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அவரது தந்தை கடந்த ஜனவரி மாதம் மறைந்தார். அந்த சோகத்தை நினைத்து உருகிய குருணால் பாண்ட்யாவுக்கு பேச முடியாமல் நாக்கு தழுதழுத்தது.

அரை சதத்தை மறைந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியபடி கண்ணீர் சிந்தினார். பிறகு அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா், அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறி தேற்றினார்.

போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தனது தந்தையை நினைவுபடுத்தி குருணால் பாண்ட்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொரு பந்திலும் என்னுடைய மனதிலும், இருதயத்திலும் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் என்னுடன் இருந்தீர்கள் என உணர்ந்தேன். எனது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. எனக்கு வலிமையாக இருந்ததற்கும், எனக்கு மிக பெரிய உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களை பெருமையடைய செய்து விட்டேன் என நம்புகிறேன். இது உங்களுக்கானது.  நாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கானது என பதிவிட்டுள்ளார்.