அரும்பாக்கம் நகை கொள்ளையில் சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் உள்ள பெடரல் வங்கியின் நிதி நிறுவனத்தில் கடந்த 13-ந் தேதி கொள்ளை நடைபெற்றது. அன்று மதியம் 2 மணி அளவில் நிதி நிறுவனத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது, நிறுவனத்தின் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் உள்ள பாதுகாப்பு அறையின் சாவியை வாங்கினர்.
பின்னர் ஊழியர்களை ஓய்வு அறையில் அடைத்துவிட்டு பாதுகாப்பு அறையில் இருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் சுரேஷ் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய புலன் விசாரணையில் கொள்ளை கும்பல் உடனடியாக அடையாளம் காணப்பட்டது.
இந்த நிதி நிறுவனத்தில் ஏற்கனவே வேலை பார்த்து கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட சென்னை பாடி படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 29), அவரது கூட்டாளிகளான வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), பாலாஜி (28), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் வ.உ.சி. தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (29), தியாகராயநகர் ஆர்.கே.புரம் எச்.பிளாக்கை சேர்ந்த செந்தில்குமரன் (38) ஆகியோர் அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அச்சிரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கினார். அவருடைய வீட்டில் இருந்து கொள்ளை போன நகைகளில் 3.7 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையன் சந்தோஷின் மனைவி ஜெயந்தியும், இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி இந்திராவும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி நிறுவனத்தில் கொள்ளை போன 31.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து நேற்று 2 கிலோ 656 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் எத்தனை கிலோ நகைகள் கொள்ளை போனது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் எத்தனை இடங்களில் இருந்து எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டன? என்ற அதிகாரபூர்வ தகவலை பட்டியலாக வெளியிட்டு குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் பரபரப்பை எகிற வைத்த இந்த கொள்ளை வழக்கில் அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதையடுத்து, சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கொள்ளை வழக்கில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பாலாஜி, சந்தோஷ் ஆகிய 2 பேரை முதலில் கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் மீட்டோம். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வங்கியில் வேலை பார்த்த முக்கிய குற்றவாளியான முருகன், அவரது நண்பர்கள் செந்தில், சூர்யா ஆகிய 3 பேரை கைது செய்தோம். இதில் முருகனும், சூர்யாவும் இந்த கொள்ளை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள்.
மொத்தம் கொள்ளை போன நகைகளின் எடை 31.7 கிலோ ஆகும். இந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது. இதில் கோவையை சேர்ந்த ஸ்ரீவத்சவா என்பவரையும் கைது செய்திருக்கிறோம். அவரும் சென்னை அழைத்து வரப்படுகிறார். இதில் சந்தோஷிடம் அதிகபட்சமாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பதில் குழப்பம் இருப்பதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் அடகு வைத்த நகைகளை கவருடன் எடை போட்டிருந்தோம். பின்னர் கவர் எடையை கழித்த போது 15 கிலோ 900 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. 2 கிலோ 100 கிராம் கவர் எடை இருந்ததால் தான் இந்த சின்ன குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிக்கிய சந்தோஷின் உறவினர் அச்சிரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆவார். கொள்ளை நடந்த மறுநாள் சந்தோஷ் அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை பையில் வைத்துவிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்தும் நகையை பறிமுதல் செய்தோம். இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்க போகும் தகவல் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்கு தெரியவில்லை. கொள்ளையடித்துவிட்டு அவருடைய வீட்டுக்கு சென்றவுடன்தான் அவருக்கு தெரிந்திருக்கிறது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவருடைய வீட்டில் 3 நாட்கள் இருந்திருக்கிறது. அந்த தகவல் அவருக்கு தெரியும். எனவே அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைந்திருந்தோம். அதன் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம். விசாரணைக்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்போம். சென்னை போலீஸ்துறை எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.