புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தமிழக அரசு அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ஜே.யசோதா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மாற்றல் மனு ஒன்றை 2015-ம் ஆண்டில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி கடந்த 2015-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு கடந்த மாதம் 16-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான காணொலி அமர்வில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.