அருண் விஜய்க்கு ஜோடியாகும் ரித்திகா சிங்
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ’, விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் லியோன் ஒப்பந்தமான நிலையில், தற்போது டி.இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
மார்குஸ் ஒளிப்பதிவையும், மதன் படத்தொகுப்பையும், சி.எஸ்.பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.