இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் யானை. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் யானை படத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ” யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாகவும், கூலிப்படையினராகவும் சித்தரித்துள்ளனர்.குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் வரும் சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளன. கச்சத்தீவு பிரச்சினையும் இந்த படத்தில் கையாளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கின்றன. உயிரைப் பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்க்ளை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும். இப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று படத்திற்கு எதிராகத் தொடுத்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரிடம் தணிக்கை குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளீர்களா? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள் தணிக்கை சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழுவில் மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.