X

அருண் ஜெட்லி மறைவு – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி, கடந்த 9-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அருண் ஜெட்லியின் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘அருண் ஜெட்லி அரசியலில் ஜாம்பவான் ஆவார். இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராவார். அவரது மறைவு மிகுந்த மனவேதனையானது.

ஜெட்லியின் மனைவி மற்றும் மகனிடம் எனது இரங்கலை தெரிவித்தேன். ஓம் சாந்தி. பாஜகவிற்கும், அருண் ஜெட்லிக்குமான பந்தம் பிரிக்கமுடியாத ஒன்று. அவசர காலங்களில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அவர் முன்னணியில் இருந்தார்,

அவர் கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தக்கூடிய எங்கள் கட்சியின் மிகவும் விரும்பப்பட்ட முகமாக மாறினார்’ என கூறியுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ‘அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது; அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு’ என கூறியுள்ளார்.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வேதனை மிக்கது. சிறந்த வழக்கறிஞர், நாடாளுமன்றவாதி, புகழ்பெற்ற மந்திரியாக இருந்த அவர், நாட்டை கட்டமைக்க மகத்தான பங்களிப்பை அளித்தார்’ என கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கும் அப்படித்தான். என் துக்கத்தை வார்த்தைகளால் கூற முடியாது. அவர் சக்திவாய்ந்த அறிவாளி, ஒரு திறமையான நிர்வாகி ஆவார்’ என கூறியுள்ளார்.

இவர்களைத்தொடர்ந்து அருண் ஜெட்லியின் மறைவுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.