அருணாசல பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி பெமா காண்டுவின் வாகன அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு காரில் இருந்து ரூ.1.80 கோடியை தேர்தல் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பறிமுதல் செய்ததாகவும், அதை தேர்தல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் எண்ணுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவுவதாகவும் காங்கிரஸ் கட்சி நேற்று குற்றம் சாட்டியது.
இந்த வீடியோக்களை செய்தியாளர்களிடம் காட்டிய அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இது தொடர்பாக பிரதமர் மோடி, பெமா காண்டு மற்றும் துணை முதல்-மந்திரி சவ்னா மெயின் ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் அருணாசல் மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான மாநில பா.ஜனதா தலைவர் தபிர் கவோவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அருணாசல பிரதேசத்தில் நேற்று காலையில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த பணம் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தேர்தல் கமிஷனுக்கும் கண்டனம் தெரிவித்தார்.