திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.
தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெறும். அதன்படி நாளை (வியாழக்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறும். அன்று அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும்.
தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.