அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துட தொடங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கியமானது.

ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் விழா விழாவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த கார்த்திகை தீபத்தின்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை ஏற்றினர்.

இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

கொடியேற்றும் நிகழ்ச்சியை காண கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெளியில் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.

மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த வெளியூர் பக்தர்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

முதல் திருவிழா நாளிலேயே வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இரவு விநாயகர் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது.

கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இன்று இரவு சாமி வீதிஉலா கோவில் பிரகாரத்திலே நடக்கிறது.

தீபவிழாவின் உச்ச நிகழ்வாக 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools