அரியலூர் மாவட்டம் அருகே சாலையில் இருக்கும் பெயர் பலகைகள் திருட்டு – நெடுஞ்சாலை துறையினர் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடி கொண்டான்-கல்லக்குடி, கீழ காவட்டாங்குறிச்சி-கீழப்பழுவூர், திருமானூர்-ஏலாக்குறிச்சி ஆகிய சாலைகளில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள், எச்சரிக்கை பலகைகள் சமீபத்தில் திருட்டுப் போனது.

இதேபோன்று கிராம சாலைகளில் வைக்கப்பட்ட சிறிய எச்சரிக்கை பலகைகளும் காணாமல் போயின ஆகவே அந்த இடங்களில் பலகை இல்லாமல் சட்டங்களாக அவை காட்சியளிக்கின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இந்த எச்சரிக்கை மற்றும் பெயர் பலகைகள் அலுமினியத்தால் ஆனவை. இதனை மர்மநபர்கள் குறிவைத்து திருடிச் செல்வது நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருடர்கள் சிக்கவில்லை. தொடக்கத்தில் அந்த பெயர் பலகைகள் காணாமல் போனபோது காற்றில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் பல்வேறு இடங்களில் மாயமானதால் இது திட்டமிட்ட திருட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.

பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, சி.சி.டி.வி. கேமரா வசதி இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் இந்த பலகைகள் திருடப்பட்டுள்ளது. மதுபோதை ஆசாமிகள் இது போன்ற திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வகை திருட்டு புதுவிதமாக இருப்பதாக காவல்துறையினரும் நெடுஞ்சாலை துறையினரும் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news