அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், மருதையாறும் அரியலூர் மாவட்டத்தில் தான் பாய்கின்றன. ஆனாலும் அரியலூர் மாவட்டம் இன்னும் வறண்ட பூமியாகத்தான் உள்ளது. அங்கு மிகக்குறைந்த அளவில் தான் பாசன வசதி பெற்ற நிலங்கள் உள்ளன. அரியலூர் மாவட்டத்தின் மொத்த வேளாண் பரப்பு 2.36 லட்சம் ஏக்கர். ஆனால், பாசன வசதி பெற்ற நிலங்களின் பரப்பு 90,710 ஏக்கர், அதாவது 38.43% மட்டும் தான்.
அரியலூர் மாவட்டம் வறண்ட மாவட்டமாக நீடிப்பதற்கு காரணம் அம்மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் பயனற்றுப் போய் விட்டது தான். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 11-ம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய ஏரிகளுக்கும் ஆற்றில் இருந்தும், சிறிய ஏரிகளுக்கு பெரிய ஏரிகளில் இருந்தும் தண்ணீர் செல்வதற்கு நீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், காலப்போக்கில் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. வீராணம் ஏரியை விட பெரிய ஏரியான சோழ கங்கம் ஏரி அதன் பரப்பளவில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இழந்து விட்டது. பெரும் கொள்ளளவு கொண்ட ஏரிகள் தூர்வாரப்படவில்லை.
மிகவும் வலிமையான பாசனக் கட்டமைப்பைக் கொண்டுள்ள அரியலூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாசனக் கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டெடுத்தல், அனைத்து ஏரிகளையும் அவற்றின் முழுக் கொள்ளளவுக்கு தூர்வாருதல், கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதன் மூலம் அரியலூர் மாவட்டம் இழந்த வளத்தையும், செழிப்பையும் விரைவாக மீண்டும் வென்றெடுக்க முடியும்.
இதுவரை அரியலூர் மாவட்டத்தில் வேலை இல்லை என்று கூறி வெளியூருக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வளமாக வாழ முடியும். அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதை விட சிறந்த கனவுத் திட்டம் இருக்க முடியாது. அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 29-ந் தேதி சனிக்கிழமை, 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். அரியலூர் மாவட்டத்தின் கீழப்பழுவூரில் தொடங்கும் எழுச்சி நடைபயணம் கரைப்வெட்டி, கண்டராதித்தம் ஏரி, அரியலூர், மீன் சுருட்டி, ஜெயங்கொண்டம், ஆண்டி மடம், தா.பழூர் வழியாக காட்டுமன்னார் கோவில் என்ற இடத்தில் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.