X

அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மனுக்கள் தாக்கல் செய்தனர். பல்கலை மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப குழு தாக்கல் செய்த பதில் மனுக்களில், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என கூறப்பட்டது.

தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன் தரப்பில் முறையிடப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. விசாரணையின்போது ஆன்லைனில் தேர்வு நடத்துவது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்தநிலையில், மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ஆன்லைன் தேர்வு அல்லது நேரடி தேர்வு நடத்தியது தொடர்பாக, பல்கலைகளிடம் இருந்து விபரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்கிறோம். நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றார்.

ராம்குமார் ஆதித்தன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், தேர்வு முடிவுகளை பல்கலைகள் வெளியிடக்கூடாது என்றார். மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகம், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், அவர்களால் உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை உள்ளது  என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

இந்நிலையில் தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.