கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிர்ணயித்தபடி அரவக்குறிச்சி தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வாரா? என தொண்டர்களிடையே குழப்பம் நிலவியது. எனினும் தேர்தல் விதிகளை பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கிவிட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.