அரபிக்கடலில் உருவாகும் நிசர்கா புயல்! – 3 மாநிலங்களில் கன மழை
அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசர்கா பெயரிடப்பட்டுள்ளது.
நிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் சில பகுதிகள் (மும்பை, பால்கர், தானே, ராய்காட்), கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்பகுதிகளுக்கு ஜூன் 3 வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.