X

‘அரண்மனை 3 படத்தில் நடித்தது நல்ல அனுபவம் – நடிகை சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சாக்‌ஷியுடன், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் குறித்து சாக்‌ஷி அகர்வால் கூறும்போது, ‘அரண்மனை 3 படத்தில் நடித்தது நல்ல அனுபவம். இயக்குனர் சுந்தர்.சி திறமையானவர். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது. ஒரு படத்தை இயக்கி நடிப்பது மிகவும் கடினமான விஷயம். அதை சுந்தர்.சி மிகவும் திறமையாக கையாண்டார். மேலும் படத்தில் நிறைய நடிகர்கள். அவர்களை ஒருங்கிணைத்து நன்றாக வேலை வாங்கினார். இவருடைய படங்களில் நடிகைகளை அழகாக காண்பிப்பார். அதுபோல் என்னை மிகவும் அழகாக காண்பித்து இருக்கிறார். சரியாக திட்டமிட்டு படத்தை அழகாக முடித்திருக்கிறார். தற்போது தியேட்டரில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்’ என்றார்.