Tamilசெய்திகள்

அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்குமான ஆள்தேர்வு பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இனி மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதற்கான சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் ஆகியவற்றில் தான் அதிக எண்ணிக்கையில்  தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆவின், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும்  அதிக பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். அது தான் ஊழல் இல்லாத, வெளிப்படையான ஆள்தேர்வுக்கு வழிவகுக்கும்.

ஆனால், 2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு அனைத்து பொதுத்துறை நிறுவன நியமனங்களுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை திட்டமிட்டு திணிக்கப்பட்டன. அவை பணியாளர் நியமனங்களில் தகுதி, திறமைக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளும், ஊழலும் பெருகுவதற்குத் தான் வழிவகுத்தன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்களின் ஆள் தேர்வு முறையில் ஓட்டைகள் இருப்பது  தான் முறைகேடுகள் நடப்பதற்கும், மோசடிகள் செய்யப்படுவதற்கும் காரணம் ஆகும். அனைத்து பொதுத்துறை  நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது நியமனங்களில் ஊழலைத் தடுக்க உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பொதுத்துறை நிறுவனப் பணிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் முதல் தொகுதி மற்றும் இரண்டாம் தொகுதி பணிகள் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கான ஆள்தேர்விலும் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே, பணி நியமனங்களில் ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும். மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டிலும் அதே நிலையை ஏற்படுத்தினால் மட்டும் தான் அரசு பணி நியமனங்களில் ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும். அப்போது தான் தமிழகத்தின் கிராமப்புற, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் முதல் தொகுதி பணிகளுக்கு செல்ல முடியும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆள்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே  மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் தேர்வாணையம் வலுப்படுத்தப் பட வேண்டும்.  அதேபோல் ஆணையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையையும் தமிழக அரசு கணிசமாக அதிகரிக்க  வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து பணிகளுக்கும் நேர்காணல்கள் ரத்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவிகளை நிரப்புதல், மனிதவளத்தை அதிகரித்தல், அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டால்  அவர் பாராட்டுக்குரியவராக இருப்பார்; ஊழல் இல்லாத அரசு பணி நியமனங்கள் என்ற கனவும் நனவாகும்.  இவ்வாறு தமது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.