அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்றூ அமைச்சர் சிவசங்கர் பேசியபோது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு பயண சலுகை வழங்கப்படுகிறது. ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால், அவர்கள் ஆறாவது பயணம் முதல் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன்வந்தால் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.