ஊதிய உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
இதனால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவசர சிகிச்சை பிரிவு மற்றும் டெங்கு காய்ச்சல் வார்டுகளில் மட்டுமே டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். வழக்கமான மருத்துவ சேவை முழுமையாக கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
அரசு ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நடைபெற வேண்டிய ஆபரேஷன்கள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
அரசு டாக்டர்களின் போராட்டத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆதரவு அளித்து பணியை புறக்கணித்தனர். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையான சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வெளி மாநில நோயாளிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் டாக்டர்களின் வேலைநிறுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் சிலர் உண்ணாவிரதமும் இருந்தனர். ஆஸ்பத்திரியின் வளாகத்தில் முகாமிட்டு தர்ணா ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று டாக்டர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் மருத்துவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வந்தது.
7 நாட்களாக போராட்டம் நீடித்து வந்ததால் அதனை முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் பணி முறிவு (பிரேக்கிங் சர்வீஸ்) இடமாற்றம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜயபாஸ்கர் எச்சரித்தார்.
நேற்று பகல் 2 மணி வரை பணியில் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் வரவில்லை என்றால் அந்த இடங்கள் காலியாக கருதப்பட்டு புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
அரசின் எச்சரிக்கையை மீறி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடர்ந்தனர். இதனால் நேற்று காலையில் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வேலைநிறுத்தம் நடத்திய முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். பிற மாவட்டங்களில் பணியாற்றிய டாக்டர்களும் வெளி மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 60 டாக்டர்களை அதிரடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் புதிய மருத்துவர்களை தேர்வு செய்யும் ஆயத்த பணிகளும் தொடங்கியது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அறிவித்தார். மருத்துவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் பாதிப்பை ஏற்க முடியாது என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் சிலர் நேற்று பிற்பகல் பணிக்கு திரும்பினார்கள். அரசின் நடவடிக்கை தீவிரமானாலும் சில டாக்டர்கள் போராட்டங்களில் உறுதியாக இருந்தனர். தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு மீண்டும் அவகாசம் கொடுக்கப்பட்டு இன்று காலை 8 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசின் சார்பில் கெடு விதிக்கப்பட்டது.
அதனை ஏற்று டாக்டர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை முதல் பணிக்கு திரும்பினார்கள். இதன்மூலம் 7 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு நோயாளிகளின் நலன் கருதியும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம்.
எங்களது வேலைநிறுத்தம் 8-வது நாளாக நீடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை கடவுளுக்கு இணையாக மக்கள் பார்ப்பதாக முதல்-அமைச்சர் கூறியதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.