அரசு மருத்துவமனை மருத்துவர்களை வேலை நிறுத்தம்! – நோயாளிகள் அவதி
தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு அளவில் அரசு மருத்துவ மனைகளிலும் மருத்துவ கல்லூரிகளிலும் பணியாற்றுகின்றனர்.
அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் அமைச்சர் மற்றும் செயலாளர் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.
2 மாத காலம் ஆகியும் கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன. இன்று (25-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவோ எந்தவித உத்தரவாதமும் தராததால் திட்டமிட்டபடி இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 4 அரசு டாக்டர்கள் சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கடுமையாக பாதிக்கப்பட்டன.
அவசர அறுவை சிகிச்சை மற்றும் டெங்கு காய்ச்சல் வார்டு பணி ஆகியவற்றை மட்டும் செய்வதாகவும் ஏனைய அனைத்து சிகிச்சைகளையும் புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் இன்று பாதிக்கப்பட்டனர். டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் புற நோயாளிகள் பிரிவு, அனைத்து சிறப்பு பிரிவு நோயாளிகள் அவதிப்பட்டனர்.
ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் சிகிச்சை கிடைப்பதால் அதனை நம்பி வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ செலவு செய்ய வசதி இல்லாதவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளை நம்பி உயிர் வாழ்கின்றனர்.
தினமும் லட்சக்கணக்கானவர்கள் புற நோயாளிகளாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புறநோயாளிகள் சேவை முற்றிலும் முடங்கியதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். தேர்வு செய்யப்பட்ட சிறிய பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. அதனை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதயம், நரம்பு, கல்லீரல், எலும்பு முறிவு உள்ளிட்ட முக்கிய துறைகளும் டாக்டர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டன.
பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை பட்ட மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவர்கள் மற்றும் நர்சுகளை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. முழுமையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் திரும்பி சென்றனர்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அங்கு 1000 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று பணிக்கு வரவில்லை. பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர். அனைத்து வார்டுகளிலும் புறநோயாளிகள் பிரிவிலும் அவர்கள் மூலமாகவே மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சேவை அளிக்கப்பட்டன.
சுமார் 3000 மருத்துவ மாணவர்கள் நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இன்று நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை. அவசர சிகிச்சை தவிர மற்ற ஆபரேஷன்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியது.
காய்ச்சல் பிரிவு அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் அரசு டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீன் சாந்திமலர், உள்தங்கும் மருத்துவ அதிகாரி ரமேஷ் ஆகியோர் புறநோயாளிகள் பிரிவில் அமர்ந்து நோயாளிகளை பரிசோதித்தனர்.
அங்கு 500 அரசு டாக்டர்கள் பணியாற்றிய நிலையில் இன்று பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்தனர்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் ஜெயந்தி கூறுகையில், ‘டாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் மூலம் புறநோயாளிகள் பிரிவு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.
இதற்கிடையே போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகள் 4 பேருடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, போராட்டம் தொடரும் என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.