ஊதிய உயர்வு, காலம் சார்ந்த பதவி உயர்வு, மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றி தர வேண்டும் என்று அரசுக்கு அரசு டாக்டர்களின் பல்வேறு சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டன.
சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அரசு தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பல்வேறு கட்ட போராட்டங்களை அரசு டாக்டர்கள் நடத்தி வந்தனர். கருப்பு பேட்ஜ் அணிந்தும், தர்ணா போராட்டங்களிலும் ஈடுபட்டனர். நோயாளிகளை பாதிக்காத வகையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
ஆனாலும் கோரிக்கைகள் பற்றி பரிசீலனை செய்யாததால் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
இருதயம், சிறுநீரகம், எலும்பு முறிவு, நரம்பியல், கல்லீரல், ரத்த நாளம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பிரிவு உள்ளிட்ட அனைத்து புற நோயாளிகள் பிரிவிலும் டாக்டர்கள் இல்லாததால் முழுமையாக செயல்படவில்லை.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரியாகும். இங்கு தினமும் 10 ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
உள்நோளாளிகளாக 5 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். பல்வேறு சிறப்பு துறைகளை கொண்ட இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களும் சிகிச்சை அளித்தனர்.
500 க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் பணிபுரியும் அங்கு மிக குறைந்த அளவில் டாக்டர்கள் பணியில் ஈடுபட்டதால் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இதேபோல ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். 400 அரசு டாக்டர்கள் பணிபுரியும் இந்த மருத்துவமனையில் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இதேபோல் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி மற்றும் மாநகராட்சியின் மூலம் செயல்படும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலைக்கு செல்லவில்லை. ஒரு சில மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலைநிறுத்தம் குறித்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி கூறியதாவது:-
அரசு டாக்டர்களில் ஒரு பிரிவினர்தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் மற்றொரு சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்களை கொண்டு நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புறநோயாளிகள், உள்நோயாளிகள் மருத்துவ சேவை பாதிக்கப்படவிலலை. அவசரமாக செய்யக்கூடிய ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக சிறிய ஆபரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அவசரமாக செய்யக்கூடிய ஆபரேஷன்கள் மட்டும் செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் புற நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவார்கள். அவர்களுக்கு முழுமையான மருத்துவ சேவை இன்று வழங்கப்படவில்லை. பல இடங்களில் நோயாளிகள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு தலைமை மருத்துவமனை, குளித்தலை, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம், மைலம் பட்டி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீத டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசர சிகிச்சைகள் மட்டும் செய்தனர். மற்ற பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்ட அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர், காரை, கிருஷ்ணா புரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. மாவட்டம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 130 டாக்டர்கள் வரை பணியாற்றி வரும் நிலையில், இன்று காலை 100 டாக்டர்கள் பணிக்கு வந்திருந்தனர். 30 டாக்டர்கள் பணிக்கு வரவில்லை. அரியலூர்- புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமண்ணார் கோவில், வேப்பூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாக்டர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் ஒரு சில டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நோயாளிகள் அவதி அடைந்து வந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை உள்பட 13 அரசு ஆஸ்பத்திரிகள் 90-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன.
இவற்றில் பணிபுரியும் 450 டாக்டர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும் பிரசவ வார்டு அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் டாக்டர்கள் பணியில் இருந்தனர். உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் திட்டமிட்டபடி நடந்தன.
புற நோயாளிகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவு டாக்டர்கள் யாரும் பணிக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், ஆரணி, தண்டராம் பட்டு உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.