Tamilசெய்திகள்

அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசி உடைவது ஏன்? – மனித உரிமை ஆணையம் கேள்வி

நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பார்வதி (வயது 54). சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற அவருக்கு நர்சு ஒருவர், இடுப்பில் ஊசி போட்டார். மருந்து முழுவதும் இறங்கிய பின்னர், ஊசியை வெளியே எடுக்க முயன்றபோது ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கி கொண்டது.

இதைத்தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வதி அனுமதிக்கப்பட்டு அவரது உடலில் சிக்கிய ஊசி அகற்றப்பட்டது. இதேபோன்று, மேலும் ஒரு சில சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தரமான ஊசி வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடர்பாக, ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.

பின்னர், நோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன்? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *