அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினர். போக்குவரத்து துறை அரசு முதன்மைச் செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச. தலைவர் சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து சி.ஐ.டி.யு. சங்க தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், எஸ்.எம்.எஸ். சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுமுக உடன்பாடு எட்டப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட 66 சங்க நிர்வாகிகளும் எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த படி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அகவிலைப்படி உயர்வு குறிப்பாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை என்பதை மாற்றி அமைக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் 81 மாதம் அகவிலைப்படி உயர்வை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையையும் பிரதானமாக வைத்து நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.