Tamilசெய்திகள்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.2 கோடி நஷ்டம் – அமைச்சர் தகவல்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 25-ந் தேதி அரசு பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை சுமார் 3 மாதங்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்பட்டாலும், கொரோனா பயம் காரணமாக பொதுமக்கள் பஸ்களில் பயணிக்க பயப்படுகிறார்கள். இதனால் பஸ்களில் வழக்கமான பயணிகள் கூட்டம் இல்லை.

இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த நஷ்டத்தை தடுக்க வெளிமாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிற மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை. பிற மாநில அரசுகள் அனுமதி அளித்ததும், பஸ் போக்குவரத்து தொடங்கப்படும்.

இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.