நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது.
தலைநகர் டெல்லியின் சீலாம்பூர், ஜாப்ராபாத் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. தற்போது போராட்டங்கள் குறைந்து வட மாநிலங்களில் அமைதி திரும்பி வருகிறது.
இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதி தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து சென்னையில் பேரணி நடத்த முடிவானது.
இந்நிலையில், சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை விடுமுறை எடுக்க போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. அதனால் அவர்கள் வழக்கம்போல் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும். யாருக்கும் விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.