X

அரசு பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை

கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக் காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் சேர்ந்துகொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அதன்படி, கடந்த 17-ந்தேதி முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் 2 நாட்களில் மட்டும் 2½ லட்சம் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளில் சேர்ந்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போட்டிப்போட்டு நடந்து வருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நிலவரப்படி, 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் சேர்ந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதேபோல், பிளஸ்-1 வகுப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளில் சேர்ந்து இருக்கின்றனர். அதன்அடிப்படையில் 1 முதல் பிளஸ்-1 வகுப்பு வரை 5½ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடந்து இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

கொரோனா காரணமாக குடும்ப சூழ்நிலை சரியில்லாததால், கல்வி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் பலர் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டுவதாக, சம்பந்தப்பட்ட பள்ளிகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்தந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இடம் போக மீதியிருக்கும் இடங்கள் தான் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கல்வியிலும் கொரோனா புரட்சி செய்து இருப்பதை இதன்மூலம் பார்க்கமுடிகிறது. இதேபோல், அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.