அரசு கேபிள் டிவி நிறுவனத்தை அரசு மூட முடிவு செய்துள்ளதா? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனது சேவையை தொடருவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகளவு கட்டணத்தை வசூலித்து வந்தன. 2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் குறைந்த கட்டணத்தில், நிறைந்த கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து புத்துயிர் அளித்தார்.
இதனால் 4.94 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 474 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக கீழ் இணைப்புகள் வழங்கப்பட்டு 70.52 லட்சமாக உயர்ந்தது. இந்தியா முழுவதும் கேபிள் டி.வி. சேவைகளை நான்கு கட்டங்களில் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்து விலையில்லா செட்டாப் பாக்ஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார். அதன் மூலம் 16 ஆயிரத்து 702 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 36.40 லட்சம் டிஜிட்டல் தர நிலை வரையறை மற்றும் உயர் வரையறை செட் ஆப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சென்னை, சேலம், கோவை, திருச்சி மதுரை ஆகிய நகரங்களில் உயர் வரையறை கேபிள் டிவி சேவையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதுதான் படிப்படியாக இன்றைக்கு ஆலமரம் போல் வளர்ந்திருக்கிற அரசு கேபிள் டி.வி. நிறுவனம். பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 595 அரசு இ சேவை மையங்களை நிர்வாகித்து வந்தது. அரசு கேபிள் டிவியின் கீழே 2017 ஏப்ரல் முதல் 36 லட்சம் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 21 லட்சம் செட்டாப் பாக்ஸ் மட்டுமே செயலில் உள்ளன. 11 லட்சம் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லை. தி.மு.க. அரசுக்கு ஏழை எளிய மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை தான் இது காட்டுகிறது.
அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேர்களை தனியாருக்கு மாற்றம் செய்திருப்பது அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்துகிற உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தனியாருக்கு சிவப்பு கம்பளம் விரித்து தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த செயலுக்கு ஒப்புக்கு தப்பாக சேர்மனை நீக்கி இருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆலமரமாக வளர்ந்திருக்கிற அரசு கேபிள் நிறுவனத்தின் மீது மறைமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு யுத்தமாக பார்க்கிறோம். இந்த நடவடிக்கை அரசு கேபிள் டிவியை காப்பாற்றவா? அல்லது மூடுவிழா நடத்துவதற்கா? என்று அரசு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.