பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை அடையாளம் காண்பதற்காக தமிழக அரசால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேடல் குழுவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக கவர்னர் அறிவுறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேடல் குழு அமைப்பதில் கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், கவர்னரின் இந்த தலையீடு தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சென்னை பல்கலைக்கழக சட்டத்திற்கு உட்பட்டு தான் அமைய வேண்டும். சென்னை பல்கலைக்கழக சட்டத்தின்படி தேடல் குழுவில் மூவர் மட்டும் தான் இடம் பெற முடியும். அதன்படி தான் மூவர் கொண்ட தேடல் குழுவை அமைத்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் சட்டத்தின்படியே உள்ளன. அரசின் அறிவிக்கையை திரும்பப் பெறும்படி ஆளுனரால் கோர முடியாது.
தேடல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசிதழில் வெளியிடும் அதிகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு உண்டு. அதை முறையற்ற செயல் என்று கூறுவதற்கு கவர்னர் மாளிகைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தேடல் குழு கடந்த 13-ந் தேதி செயல்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால், தமிழக அரசின் தேடல் குழுவால் துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் மூவர் பெயர் கொண்ட பட்டியலை கவர்னர் அவருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது. அது பெரும் சிக்கலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படும் வரையிலோ அல்லது நீதிமன்றங்கள் தலையிட்டு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வரையிலோ சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இதே சிக்கல் நீடிப்பதால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் வளர்ச்சிக்கு உதவாது; மாறாக வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். சட்டப்படி துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக கவர்னர் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.