அரசு எந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து கிடக்கிறது – அண்ணாமலை அறிக்கை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் பலர் உயிரிழந்தும், 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றும் வருகின்றனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. ‘டாஸ்மாக்’ சாராயக் கடைகள் மூலம் ஒரு தலைமுறையையே குடிக்கு அடிமையாக்கியதோடு மட்டுமல்லாமல் இன்று கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திறனற்ற தி.மு.க. அரசு. போலீஸ்துறை அதிகாரிகளை பலிகடாவாக்கிவிட்டு முழு பிரச்சினையையும் பூசி மெழுக பார்க்கிறார் முதல்-அமைச்சர்.

தமிழகத்தில் கட்டுப்பாடற்ற சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் பெருகி இருக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய போலீஸ்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் இந்த ஆண்டு கொள்கை விளக்க அறிவிப்பில் தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராய மரணங்கள் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது.

10-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான பின்னரே நடவடிக்கை என்ற பெயரில் நாடகமாடுகிறது. தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இதன் மூலம் இத்தனை நாட்கள் இவர்கள் அனைவரும் அரசுக்கு தெரிந்தே கள்ளச்சாராயம் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது தி.மு.க. அரசு.

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் அலட்சியப்படுத்தி வெறும் விளம்பர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம்-ஒழுங்கையும் காப்பாற்ற இயலாமல் பொதுமக்களின் உயிருடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

அரசு எந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து கிடக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த துயர சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools