கொரோனா தடுப்பு பணிக்கு ஏராளமான நிதி தேவைப்படுவதால் அகவிலைப்படி நிறுத்தம், பிஎப் வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.
மேலும் இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (P.F) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிக்காக இந்தப்பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.